நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய திருவிழா! யாழ். மாநகர முதல்வரின் அறிவிப்பு

யாழ். நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழா 06.08.2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இறையருள் கை கூடியுள்ளது என யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் செயலகத்தால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

யாழ். நல்லூர் கந்தப் பெருமான் ஆலய உற்சவம் வழமை போல நடைபெறவுள்ளது. அதற்கான சகல ஏற்பாடுகள் யாவும் அவன் அருளாலே முழுமையாக பூர்த்தியாகியுள்ளது.

உற்சவகால முன்னாயத்தமாக 05.08.2019 மதியத்திலிருந்து 01.09.2019 நள்ளிரவு வரைவீதி தடை அமுல்படுத்தப்படும். வீதித்தடையின் போது வாகன போக்குவரத்திற்கான மாற்று பாதை ஒழுங்குகள் கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் நடைமுறைப்படுத்தப்படும்.

ஆலய உற்சவ காலத்தில் சாதாரண காவடிகள் பிரதான வீதிகள் ஊடாக உட்செல்ல அனுமதிக்கப்படும். அதே நேரம் இம் முறை ஆலயத்திற்கு வரும் தூக்குக்காவடிகள், பறவைக்காவடிகள் என்பன பருத்தித்துறை வீதியூடாக மாத்திரமே உட்செல்ல அனுமதிக்கப்படும்.

தேசிய பாதுகாப்பு என்பது முற்றிலும் பாதுகாப்பு பிரிவோடு சம்பந்தப்பட்டமையால் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப அடியார்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கி நல்லூரானின் வருடாந்த உற்சவத்தை சீராகவும் சிறப்பாகவும் இடம்பெற செய்யுமாறு அடியார்கள் அனைவரையும் அன்பாக வேண்டுகின்றேன்.

கந்தனின் கடாட்சம் நம் அனைவருக்கும் கிடைக்கப் பெற வேண்டும் என வாழ்த்தி மேற்கூறிய அனைத்தையும் உங்களின் பெரும் கவனத்திற்க கொண்டு வர விரும்புகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.